டெல்லி: காமன்வெல்த் போட்டி நடக்காமல் போனால் மகிழ்ச்சி அடைவேன். போட்டியை நான் நேரில் காண விரும்பவில்லை, அதை பார்க்க மாட்டேன். அந்த சமயத்தில் வெளிநாடு போய் விடுவேன் என்று கூறியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர், சொன்னபடி லண்டன் போய் விட்டார்.
காமன்வெல்த் போட்டி உருப்படாது என்று ஆரம்பத்திலேயே வாய் வைத்து விட்டார் அய்யர். இதற்காக அவரை கடுமையாக சாடினார் சுரேஷ் கல்மாடி. ஆனால் இன்று கல்மாடி தலையை சகட்டு மேனிக்கு உருட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு சொதப்பித் தள்ளி விட்டார் கல்மாடி.
மறுபக்கம் அய்யரோ, நான்தான் அன்றே சொன்னேனே. இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை வீணாக செலவழிக்கும் செயல் மனதுக்கு வேதனை தருகிறது என்று கூறியிருந்தார்.
மேலும் கடந்த மாதம் சசி தரூரின் 3வது திருமணத்திற்காக கேரளா வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காமன்வெல்த் போட்டியை நான் பார்க்க மாட்டேன். அதை விரும்பவில்லை. அந்த சமயத்தில் நான் வெளிநாடு போய் விடுவேன் என்றார்.
சொன்னபடி தற்போது அவர் லண்டன் போய் விட்டார். 2 வாரம் கழித்துதான் அவர் இந்தியாவுக்கே வருவாராம்.
குறிச்சொற்கள்:காமன்வெல்த் போட்டி




